மின்கம்பங்களில் உள்ள கேபிள் வயர்களை 15 நாட்களில் அகற்ற வேண்டும் - மின்சார வாரியம் அதிரடி உத்தரவு
சென்னை மாநகரில் மின்கம்பங்களில் உள்ள கேபிள் வயர்களை 15 நாட்களில் கேபிள் ஆபரேட்டர்கள் அகற்ற வேண்டும் என மின்சார வாரியம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மின் கம்பங்களில் கேபிள்கள்
சென்னையில் பெரும்பாலன பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் தொலைக்காட்சி இணைப்பை பெறுவதற்கான கேபிள்கள், தொலைபேசி இணைப்புகான கேபிள்கள், இணையதள வசதிக்கான கேபிள்கள் கற்றப்பட்டும், சுற்றப்பட்டும் உள்ளது. இதன் காரணமாக மின்சார விபத்தும், உயிர் இழப்பும் ஏற்படுகிறது. குறிப்பாக தென் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைப்பதால் மின் பழுதை சரிபார்ப்பதில் மின் ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்படுவதும், மின் ஊழியர்கள் உயிர் இழப்பு ஏற்படுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
15 நாட்களில் அகற்ற உத்தரவு
இதனையடுத்து தற்போது மின்சார வாரியம் சார்பாக புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மின் கம்பங்களில் உள்ள கேபிள் வயர்களால் உயிரிழப்பு, விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் மின்கம்பங்களில் உள்ள கேபிள் வயர்களை 15 நாட்களில் கேபிள் ஆபரேட்டர்கள் அகற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மின்கம்பங்களில் உள்ள கேபிள் வயர்கள் அகற்றப்பட்டதா என்பதை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிசெய்ய வேண்டும் என்றும் மின்கம்ப கேபிள் வயர்களால் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அந்தப்பகுதி மின்வாரிய பொறியாளரே அதற்கு பொறுப்பு எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்