தமிழகத்தில் நாளை மறுநாள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
தமிழகத்தில் நாளை மறுநாள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் காலை 7 மணிக்கு தொடங்கும் நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி தவிர) என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,826 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஒரு இடத்தில் மட்டும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இறுதியாக 12,607 பதவிகளுக்கு 57,778 பேர் களத்தில் உள்ளனர். வேட்மனு தாக்கல் முடிந்து, கடந்த 7 ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சுயேட்சைகளுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த 8 ஆம் தேதி முதல் பிரசாரம் தீவிரம் அடைந்தது. வீடு, வீடாக சென்று வேட்பாளர்கள் வாக்குகளை சேகரித்தனர். பிரசாரம் செய்ய இன்று இறுதி நாள் என்பதால், வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் காலை 7 மணிக்கு தொடங்கி இடைவிடாமல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இன்று மாலை 6 மணிக்கு பிறகு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. மீறி பிரசாரம் செய்தால் விதிமீறலாக கருதப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று, வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, அரசியல் கட்சியினரும் கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக தினசரி காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தார். இறுதி நாளான இன்று திருநெல்வேலி மாவட்ட மக்களிடம் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலம், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.
அன்றைய தினம் மாலைக்குள் வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவரும் வாக்குப்பதிவு மையங்களுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குப்பதிவு மையங்களில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மற்ற வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ மூலம் படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு எந்திரத்துக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, அன்று இரவே வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும். வாக்குப்பதிவுக்காக 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்குகள் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில், வருகிற 22ம் தேதி (செவ்வாய்) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி, உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும். முன்னணி நிலவரம் 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் தெரியவரும். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர 12 ஆயிரம் ஊர்காவல் படையினர், 3 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்கள் என மொத்தம் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றம் மற்றும் மிக பதற்றமான வாக்கு சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
