கரூர்

கரூரில் “நூடுல்ஸ்” சாப்பிட்ட எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் “நூடுல்ஸ் சாப்பிட்டதால்தான் என் மகள் இறந்தாள்” என்று புகார் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம், சின்னமூக்கணாங்குறிச்சியை அடுத்த பெரியவரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சரவணன். இவருடைய மகள் ஜீவசக்தி (14). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த 13-ஆம் தேதி நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு அன்று மாலை தனது தம்பியுடன், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஜீவசக்திக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது பெற்றோர் அவரை சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ஜூவசக்தி பரிதாபமாக உயிரிழந்தார். “நூடுல்ஸ்” சாப்பிட்டதால்தான் தன் மகள் இறந்துவிட்டாள் என்று சரவணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து வெள்ளியணை காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.