இராமநாதபுரம்

கல்வியாண்டு தொடங்கப் போவதால், இராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்கள் குறைபாடுகள் இன்றி சரியாக இருக்கிறதா என்று ஆட்சியர் ஆய்வு செய்தார்.

சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்க வளாகத்தில் பள்ளி வாகனங்கள் தர ஆய்வு செய்யும் பணி இராமநாதபுரம் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் நடைபெற்றது.

இந்த ஆய்வுப் பணிகளை ஆட்சியர் நடராஜன் தொடங்கி வைத்தார். உதவி காவல் கண்காணிப்பாளர் சர்வேஸ்ராஜ் முன்னிலை வகித்தார்.

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர் நடராஜன் வாகனங்களின் அடிப்பகுதியில் உள்ள தரைத்தள பகுதி உறுதித் தன்மையுடன் இருக்கிறதா? என்று ஒரு இடம் விடாமல் அலசி ஆராய்ந்தார். வாகனத்தை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

பின்னர் ஆட்சியர் நடராஜன் கூறியது:

“கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிச் செல்லும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வட்டாரப் போக்குவரத்துத் துறையினரால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

இந்த ஆய்வில் வாகனங்களின் பிரேக் திறன், டயர்கள் நிலை, அவசரக் கதவு பொருத்தப்பட்டு சரியான முறையில் இயங்குகிறதா, வாகனத்தின் கதவுகள் இயக்க நிலை, வாகனத்தின் படிக்கட்டுகள், ஓட்டுநர் இருக்கைகள், இருக்கையின் கீழ்புறம் பள்ளி குழந்தைகளின் பைகளை வைப்பதற்கான ரேக்குகள், வாகனத்தின் உட்புறம், தரைப்பலகை நல்ல நிலையில் உள்ளதா, ஜன்னல்கள், ஜன்னல்களுடைய கிரில்கள், சிவப்பு மற்றும் வெள்ளை பிரதிபலிப்பான், நாடாக்கள், முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகள், தீயணைக்கும் கருவி புதிய மாடலுடன் 2 கிலோ அளவிற்கு இயங்கும் வகையில் இருக்க வேண்டும். வாகனத்தில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும்.

மேலும், வாகனத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பள்ளி நிர்வாகம், கல்வித்துறை தொலைபேசி எண்கள் மற்றும் காவல்துறை தொலைபேசி எண் ஆகியவை இருக்க வேண்டும்.

வாகனம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும்.

வாகனத்தின் முன் பக்கம் மட்டும் மாணவர்கள் ஏறி, இறங்க கதவு இருக்க வேண்டும்.

இந்த நிலையில், மாவட்டத்தில் மொத்தம் 656 பள்ளி வாகனங்கள் உள்ளன. அனைத்து வாகனங்களும் மேற்குறிப்பிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

சென்ற ஆண்டு முறையாக பராமரிக்காத 60 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நடத்தப்பட்டுள்ள இந்த முகாமில் 28 வாகனங்களில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டு குறைபாடுகள் சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தக் குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பிறகுதான் வாகனங்களை இயக்க அனுமதி சான்று வழங்கப்படும். இந்த ஆய்வில் முதல் நாளில் மட்டும் 432 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன.

மீதமுள்ள 224 வாகனங்கள் பள்ளித் திறக்கும் முன்னர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குக் கொண்டுவந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் இயக்க அனுமதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.செல்வகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தாசில்தார் சண்முகசுந்தரம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஸ்வநாதன், மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.