நிலுவை தொகைகள் அனைத்தையும் உடனே வழங்குவது இயலாத காரியம் எனவும், படிப்படியாக வழங்கப்படும் எனவும் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 1700 கோடியை உடனே வழங்க வேண்டும், தொழிலாளர்களிடம் எடுக்கப்பட்ட 7 ஆயிரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வரும் 15ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடைபெற்ற 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

1652 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இந்த நிலுவை தொகைகள் இந்த 5 ஆண்டுகளில் மட்டும் வரவில்லை.

சிறிது சிறிதாக கடந்த 20 ஆண்டுகள் நிலுவையில் வைக்கபட்டவை சேர்ந்து தற்போது இந்த தொகை வந்துள்ளது.

79 கோடி ரூபாய் இன்றே ஒய்வு பெற்ற தொழிலாளர்களின் வங்கி கணக்கிலே வரவு வைக்கப்பட்டுள்ளது.

மீதி தொகை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவர்களின் வங்கி கணக்கிலே வரவு வைக்கப்படும்.

நிலுவை தொகை கண்டிப்பாக படிப்படியாக கண்டிப்பாக வழங்கப்படும்.

இதை போக்குவரத்து தொழிலாளர்கள் புரிந்து கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும்.

13 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று தான் வந்தது. நிலுவை தொகை பேச்சுவார்த்தை ஆரம்பித்ததால் அந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை நல்ல முடிவுக்கு வந்தால் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும்.

ஒரு கிலோ மீட்டருக்கு 42  பைசா என்ற விகிதத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை இயங்கி கொண்டு இருக்கிறது.

ஆந்திராவில் 59 பைசாவும், கர்நாடகாவில் 62 பைசாவும் வசூலிக்கபடுகிறது.

500 பேர்கள் இருந்தாலே பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று அம்மாவின் ஆணைப்படி தமிழக அரசு இயங்கி வருகிது.

இதில் மிகப்பெரிய இழப்பு இருந்து வருகிறது. அதை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளது.

அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறிதியளித்துள்ளார். எனவே விரைவில் இது சீர்செய்யப்படும். அதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்துள்ள போராட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.