இராமாநாதபுரம் மாவட்டத்தில், காரை வழிமறித்து, கார் கண்ணாடியை உடைத்து புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்த குடிவெறியரகள் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நம்புதாளை படையாச்சி தெருவைச் சேர்ந்த அருண்குமார் (19), தொண்டி தெற்கு தோப்பைச் சேர்ந்த அஜீத் (20), ரக்ஷன் (21), தண்டலக்குடியைச் சேர்ந்த முருகானந்தம் (22), தொண்டி உருளைக்கல்லு பகுதியை சேர்ந்த பிரதீபன் (22) ஆகிய ஐந்து பேரும் புத்தாண்டை முன்னிட்டு மது அருந்தினர்.

கீழக்கரையைச் சேர்ந்தவர் ரியாஸ் அஹமது (38). இவர் நாகூர் சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

நம்புதாளை கிழக்குக் கடற்கரை சாலையில் புத்தாண்டு (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இவர் வந்தபோது, காரை வழிமறித்த அருண்குமார் உள்ளிட்ட 5 பேரும் மது போதையில் காரின் கண்ணாடியை அடித்து நொருக்கி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

என்னசெய்வது என்று தெரியாமல் வீடு திரும்பினார் ரியாஸ். பின்னர், இதுகுறித்து ரியாஸ் அகமது தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் தொண்டி காவலாளர்கள் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் கார் கண்ணாடியை உடைத்த ஐந்து பேரையும் கைது செய்தனர்.