மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் மீது விஜய் தொலைக்காட்சி ஒரு வெறித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் இதுபோன்ற புகழ் பெற்ற ஊடகத்திலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மிக மோசமாக காட்டுவது வேதனைக்குரியது என்றும் மனநல மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தமிழகத்தில் பேசாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தொலைக்காட்சி நேயர்களை இந்நிகழ்ச்சி கவர்ந்து இழுத்து வருகிறது.

முதலில் சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி, இந்த வாரம் மனநலம்  குன்றியவர்கள் குறித்த விமர்சனங்களை முன் வைத்துள்ளது. 

நடிகை ஓவியா, ஆரவை தீவிரமாக காதலிக்கத் தொடங்கி, தனது காதலை அவ்வப்போது ஆரவிடம் வெளிப்படுத்தி வருகிறார். முதலில் தான் காதலிக்கவில்லை என ஆரவ் மறுக்கும்போது சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஓவியா, பின்னர் போகப் போக தீவிரமாக காதலிப்பதாகவும், அதற்காக அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்  போல் நடந்து கொள்வதாகவும் காட்டப்படுகிறது.

இரவு முழுவதும் ஓவியா தூங்காமல் இருப்பதும்,மழையில் நனைந்து  கொண்டு இருப்பதும், இதன் உச்சகட்டமாக நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்வதும் என மிக மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் மீது ஒரு வெறித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சி போன்ற புகழ் பெற்ற ஊடத்திலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மிக மோசமாக காட்டுவது வேதனைக்குரியது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

இது குறித்து பேசிய டாக்டர் சிவபாலன் இளங்கோவன், பிக் பாஸில் மனநலம் பாதித்தவர்கள் என நடத்தப்பட்ட நாடகம் அத்தனை ஆபாசமானது என தெரிவித்துள்ளார்.

மன நோயாளிகள் மீது, இந்த சமூகம் ஏற்படுத்தியிருக்கும் பிம்பம் நிச்சயம் வன்மமானது என்றும்  தங்கள் மனதில் இருக்கும் குரூரத்தையும், பரிகாசத்தையும், கேலியையும் எந்த வித குற்ற உணர்ச்சியும் இன்றி அவர்கள் மீது இந்த சமூகம் திணித்து கொண்டிருக்கின்றது என்பதைத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி காட்டுவதாக கூறினார்.

மன நோய் என்பது உடலில் வரும் மற்ற நோயைப் போன்றதுதான். கேன்சர் போன்ற நோய்கள் வந்தால் எப்படி சிகிச்சை அளிக்கிறோமோ அது போலத்தான் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் நடந்து கொள்வது மட்டும் ஏன் வித்தியாசமாக காட்டப்படுகிறது என்றும் அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

மனநலம் பாதிக்கப்படுவது என்பது மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்காக அவர்களை கேலியாகவும், கிண்டலாகவும் காண்பிப்பது எந்த  வகையில் நியாயம் என டாக்டர் சிவபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொது தளத்தில் மனநலம் குறித்தும், அதன் நோய்கள் குறித்தும் ஏராளமான உரையாடல்கள் சமீபத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன நோயாளிகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற பொதுபுத்தி எத்தனை தவறானது என்பதை உணர்த்த ஏராளமான தன்னார்வலர்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார்கள்.

ஆனால் இது போன்ற பொறுப்பற்ற ஊடகங்கள்  இந்த முயற்சியை திரும்பவும் தொடங்கிய இடத்திலேயே கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றன என டாக்டர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.

10 பேர் இருக்கும் ஒரு வீட்டில்  ஒருவரை மட்டும் மற்றவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தாலும், ஒதுக்கி வைத்தாலும் மனதளவில் அனைவருமே பாதிக்கப்படுவார்கள் என்பது நிதர்சனமாக உண்மை. இதனால் ஏற்படும் ஸ்ரெட்ரஸ் சரியாகக் கூடிய ஒரு பிரச்சனைதான். ஆனால் அதற்காக அவர்களை தவறாக சித்தரிப்பது என்பது கண்டிக்கப்பட வேண்டியது என சிவபாலன் கூறியுள்ளார்.

அன்புள்ள பிக் பாஸ், பச்சை உடை அணியாமல், நீங்களும், உங்கள் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களும் இத்தனை நாள் நடத்திய கூத்து தான் உங்கள் அனைவரின் மனப்பிறழ்வுக்கான அறிகுறி என நெத்தியடியாக தெரிவிதுள்ள டாக்டர் சிவபாலன், பச்சை உடை அணிந்து நீங்கள் செய்தது அனைத்தும் ஒரு ஆபாச நடனத்தின் அருவருப்பான உடலசைவுகள் மட்டுமே என பொங்கித்  தீர்த்துள்ளார்.