Dr. Shankar talk about Jayalalitha Daughter Amrudha

மறைந்த ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்பதை கண்டுபிடிக்க நடிகர் சோபன்பாபுவின் டி.என்.ஏ. இருந்தால் போதும் என்று அவருக்கு சிகிச்சை அளித்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அன்று காலமானார். மறைந்த ஜெயலலிதாவின் மகள் என்று கூறி பெங்களூரைச் சேர்ந்த பெண் அம்ருதா என்பவர் கூறி வந்தார். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், கர்நாடக அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுமாறும் அறிவுறுத்தியது. 

இந்த நிலையில், மறைந்த ஜெயலலிதாவுக்கு ஒரு மகள் பிறந்ததாகவும் அது அம்ருதாவாக இருக்கலாம் என்றும், டி.என்.ஏ. சோதனை செய்தால் மட்டுமே உண்மை தெரியும் என்றும் ஜெயலலிதாவின் உறவினர் லலிதா என்பவரும், ஜெ.வின் அண்ணன் என்று அழைத்துக் கொள்ளும் வாசுதேவனும் கூறி வந்தனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளித்த மருத்துவர் சங்கர் சில பரபரப்பு தகவல்களைக் கூறி வருகிறார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முன்பு மருத்துவர் சங்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் சங்கர், அம்ருதா கூறுவது மாதிரி அவர் ஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் பிறந்தவராக இருந்தால், ஜெ மற்றும் சோபன்பாபுவின் மகன் ஆகியோரின் டி.என்.ஏ. இருந்தால் போதும், அதை வைத்து கண்டுபிடித்து விடலாம் என்றார். ஜெயலலிதாவின் டி.என்.ஏ. கண்டிப்பாக அப்போலோ மருத்துவமனையில் இருக்கும். அதை நீதிமன்றம் மூலம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்றும் கூறினார்.

அம்ருதா, என்னை சந்தித்து இது பற்றி பேசியதாகவும், சட்டரீதியாக இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்றும் அம்ருதாவிடம் கூறிவிட்டேன். அங்க லட்சணம், கை, வாக்கு, நோய்த்தன்மை ஆகியவற்றை வைத்து அம்ருதா, ஜெயலலிதாவின் மகளா என்பதை 40 சதவீதம் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்றும் மீதி 60 சதவீதத்தை டி.என்.ஏ. சோதனையால் மட்டுமே கண்டறிய முடியும் என்றும் மருத்துவர் சங்கர் கூறினார்.