கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இரண்டு வயது குழந்தையை நான்கு தெருநாய்கள் கொடூரமாக தாக்கியதில் படுகாயமடைந்த குழந்தை தீவர சிகிச்சை பெறும் நிலையில், அவரது தாயார் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் மெயின் பஜார் அருகே கோல்டன் ஜூப்ளி பார்க் என்ற பார்க் உள்ளது. இந்த பூங்காவில் மாலை நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பூங்கா செயல்படாத நேரத்தில், அயனாஸ் என்ற இரண்டு வயது குழந்தையை அவரது தாத்தா சேகர் என்பவர் அப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது குழந்தையை பூங்காவின் தரையில் விளையாட விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பாட்டிலை எடுக்க சென்றபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த 4 தெருநாய்கள் ஒன்று சேர்ந்து, குழந்தை அயனாஸ்யை கொடூரமாக தாக்கியுள்ளது. இதை அடுத்து குழந்தை அயனாஸ் மீட்கப்பட்டு, என்.எல்.சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குழந்தைக்கு உடல் முழுவதும் ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட தையல்கள் இதுவரை போடப்பட்டுள்ளன. குழந்தையின் கண்ணின் மீது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வரும் இந்த நிலையில், குழந்தையின் தாய் சமூக வலைதளங்களில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோவொன்றில் பேசியுள்ளார். அதில் “குழந்தையை பூங்காக்கள் மற்றும் சாலை ஓரங்களில் தனியாக விடவேண்டாம். தெருநாய்களை மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்படுத்த வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ’ஒரு தாயாக என் குழந்தை படும் வலியை என்னால் தாங்கிகொள்ள முடியவில்லை. இந்த மாதிரி ஒரு நிலைமை எந்த குழந்தைக்கு வரக்கூடாது’ என்று உருக்கமாக பேசியுள்ளார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அத்தாயின் உருக்கமான வேண்டுகோளும் குழந்தையின் நிலையும் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. வீடியோவில் தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையின் தாய் கூறியுள்ளார். மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்களும் இதை வலியுறுத்திவருகின்றனர்.