Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவில் இணையும் சுப்புலட்சுமி ஜெகதீசன்? எந்த அணி? மீண்டும் பரபரப்பு..!

திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிமுகவில் இணையவுள்ளதாக மீண்டும் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Does subbulakshmi jagadeesan to join aiadmk in edappadi palanisamy team
Author
First Published Jun 5, 2023, 5:26 PM IST

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் சுப்புலட்சுமி ஜெகதீசன். சுமார் 40 ஆண்டுகாலம் திமுகவில் பயணித்தவர். தமிழக அமைச்சர், மத்திய இணையமைச்சர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். திமுகவை பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச்செயலாளர் பதவி மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி. அத்தகைய பதவியையும் கட்சியின் சீனியர்களில் முக்கியமானவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்தார்.

அத்துடன், ஈரோடு திமுக முகமாக இருந்து வந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தார். சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு முக்கிய அமைச்சர் பொறுப்பு கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரை சபாநாயகர் நாற்காலியில் அமர வைக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இவை எதுவுமே அவருக்கு கைகூடவில்லை. அரசியலில் படிப்படியாக இறங்குமுகத்தையே அவர் சந்தித்தார்.

அந்த சமயத்தில், அமைச்சர் முத்துசாமி பார்த்த உள்ளடி வேலைகளால் அவர் தோல்வியை சந்தித்ததாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். அதன்பிறகு மாநிலங்களவை எம்.பி., கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  இதனால், கட்சித் தலைமை மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. அவரது கணவர் ஜெகதீசன், திமுக தலைமையை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இது கட்சித் தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், தனது கணவரின் செயல்பாடுகளால் அவர் தர்மசங்கடத்துக்கு உள்ளானதாகவும்  கூறப்பட்டது.

அடுத்த தலைமை செயலாளர், டிஜிபி யார்? ஸ்டாலின் டிக் அடிக்கும் பெயர்?

இந்த பின்னணியில், திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன், அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதன்பிறகு, அவர் பாஜகவில் இணையப்போகிறார் எனவும், அதிமுகவில் இணையப்போகிறார் எனவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகின. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் அதிமுகவில் இணையப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், பாஜகவும் அதிமுகவும் நான் இணையும் அளவுக்கு அக்கட்சிகளுக்கு தகுதியே இல்லை. நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டேன். இதன் பிறகு எப்படி வேறு ஒரு கட்சியில் சேர முடியும்? என கேள்வி எழுப்பி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைகிறார் என மீண்டும் ஒரு தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் பேசியபோது, அந்த தகவல்களை மறுத்துள்ளனர். ஆனால், நெருப்பிலாமல் புகையாது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் தொடக்கத்தில் அதிமுகவில்தான் இருந்தார்.  ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உதவி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்த அவர், ஆசிரியர் பதவியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1977 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, அதிமுக அமைச்சரவையில் கதர் துறை அமைச்சராக இடம்பெற்றார். 1980 இல் அதிமுகவில் இருந்து விலகி அவர் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios