சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் எஸ்.ஆர்.எஸ் மற்றும் ராசி புளு மெட்டல் குவாரி சொத்துக்கள் நேற்று முடக்கப்பட்டநிலையில், இன்று விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில் ஆவணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அடங்கும்.

இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, அவரின் தந்தை ஆகியோரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது.

மேலும் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதிலும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது.

இதைதொடர்ந்து விஜயபாஸ்கர், அவரது தந்தை, மனைவி, சகோதரர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சொத்துக்களை வருமான வரித்துறை அதிரடியாக முடக்கியது.

மேலும் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான திருவேங்கை வாசலில் உள்ள அவரது 100 ஏக்கர் நிலமும், குவாரியும் முடக்கப்பட்டது.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில் ஆவணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.