தேசியக்கொடி ஏற்றும்போது டாக்டர் ஒருவர் செல்போனில் பேசியபடியே இருந்துள்ள சம்பவம் வேலூர், மருத்துவமனையில் நடந்துள்ளது. 

இந்தியாவின் 71-வது சுதந்திர கொண்டாட்டம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய தலைநகர் தொடங்கி, மாநில தலைநகர் மற்றும் மாவட்டங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் சுதந்திர கொடி
ஏற்றப்பட்டது.

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது. அப்போது தேசிய கொடியை அவமதித்ததாக மருத்துவமனையின் தலைமை டாக்டர் மீது புகார் எழுந்துள்ளது.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில், அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம் கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றினார்.

தேசிய கொடியை ஏற்றும்போது மருத்துவமனையின் தலைமை டாக்டர் கென்னடி, தன்னுடைய செல்போனில் பேசியவாரே இருந்துள்ளார். அது மட்டுமல்லாது செல்போனில் பேசிக் கொண்டே தேசிய கொடிக்கு சல்யூட் அடித்தார். 

டாக்டர் கென்னடியின் இந்த செயல் அங்கு குழுமி இருந்தோரை முகம் சுழிக்க வைத்தது. கென்னடியின் செயலை எம்.எல்.ஏ. பாலசுப்ரமணியம் தடுத்து நிறுத்த முயன்றார். 

ஆனாலும், கென்னடி செல்போனில் பேசிக்கொண்டே அவ்விடத்தைவிட்டு வெளியேறினார். இந்த சம்பவம் தொடர்பாக கென்னடி மீது பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.