கரூர்

குளித்தலையில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவ்க்கும் மக்கள், மணல் குவாரிக்காக பாதை அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் மணத்தட்டையில் மணல் குவாரி அமைப்பதற்காக குளித்தலை கோட்டாட்சியர் தலைமையில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அனைத்துப் பேச்சுவார்த்தையிலும் இப்பகுதியில் மணல் அள்ளக்கூடாது என்றே மக்கள் வலியுறுத்தினர். மேலும், லாரிகள் ஆற்றினுள் செல்ல பாதை அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தையும் மக்கள் நடத்தினர். 

பின்னர் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தாமல், பாதை அமைக்கும் பணி நடைபெறாது என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆனால், இதைமீறி ஆகஸ்ட் 11-ஆம் தேதி பாதை அமைக்கும் பணித் தொடங்கியது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆகஸ்டு 12-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.

இந்த நிலையில், பாதை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக குளித்தலை பகுதி மக்களுடன் நாம் தமிழர் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சீனி பிரகாஷ் வந்தார்.

அப்போது அவர் கூறியது: “அதிகாரிகள் அளித்த வாக்குறுதிகளை மீறி மீண்டும் பாதை அமைப்பதால் அப்பகுதி மக்கள் கோபத்தில் உள்ளனர். இதனால், அடுத்த கட்டப் போராட்டங்களை தீவிரமாக நடத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

மணல் குவாரியே வேண்டாம் என்று போராடும் மக்கள், குவாரிக்கு பாதை அமைக்க மட்டும் சம்மதம் தெரிவிப்போமா? எனவே, மணத்தட்டையில் மணல் குவாரி அமைப்பதை ரத்து செய்து பாதை அமைக்கும் பணியை கைவிடவேண்டும்” என்றார்.

இதுகுறித்து அவர்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து முறையிட்டனர். பின்னர் குளித்தலை கோட்டாட்சியர் விமல்ராஜை விசாரித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.