குன்னூர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குன்னூரில், அனுமதியற்ற பள்ளி கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்ற அலுவலர்கள், மாணவர்களை அவசர அவசரமாக வேறு கட்டிடத்திற்கு மாற்றி கட்டிடத்திற்கு சீல் வைத்து தங்களது கடைமை உணர்ச்சியை நிரூபித்தனர்.

மலை மாவட்டமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது நீலகிரி மாவட்டம். இம்மாவட்டத்தின் இயற்கை சூழலை பாதுகாக்க முடிவு செய்தது தமிழக அரசு.

அதன் அடிப்படையில், 1993–ஆம் ஆண்டு மாஸ்டர் பிளான் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, அனுமதி பெற்றும் விதிகளுக்கு உட்பட்டும் கட்டிடங்களை கட்ட அறிவுறுத்தப்பட்டது.

குன்னூர் நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களும் உள்ளன. கணக்கெடுப்பின்படி 987 கட்டிடங்கள் அனுமதி பெறாமலும் மற்றும் விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்களை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் குன்னூர் நகராட்சி நிர்வாகம் அவ்வாறு அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணியிலும் சீல் வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் குன்னூர் நகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவி தலைமையில் கட்டிட ஆய்வாளர் மீனாட்சி மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழு காவல் பாதுகாப்புடன் கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியை மேற்கொண்டனர்.

இந்த பணியில், குன்னூர் பெட்போர்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி கட்டிடத்துக்கும் சீல் வைத்தனர். அலுவலர்கள், வகுப்பு நடந்துக் கொண்டிருக்கிறது என்றும் பாராமல், மாணவர்களை வேறு கட்டிடத்திற்கு மாற்றிவிட்டு தங்கள் பணியை செவ்வணமே செய்தனர்.

இதனால், மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். பள்ளி நேரத்தில் கட்டிடத்திற்கு சீல் வைத்தது மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நகரமைப்பு அலுவலர் ரவி, “பெட்போர்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி கட்டிடத்தின் அடித்தளம் கட்டிட விதிகளின் படி அமைக்கப்படாமல் இருந்ததால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மவுண்ட் ரோட்டில் உள்ள 3 வணிக வளாக கட்டிடங்கள் குடியிருப்பாக மாற்றக் கூறியும் இதுவரை அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அந்த கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 53 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதியற்ற கட்டிடம் மீதான இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்று அவர் தெரிவித்தார்.