Do not chase people who do not wear helmet - police officer advice
கரூர்
கர்ப்பிணி பெண் உஷா பலியான சம்பவத்தின் எதிரொலியாக மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் நபர்களை காவலாளர்கள் விரட்டி சென்று பிடிக்க வேண்டாம் என்று உயர் காவல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் வாகனச் சோதனையின்போது தலைக்கவசம் அணியாமல் சென்றவரின் மோட்டார் சைக்கிளை ஆய்வாளர் காலால் எட்டி உதைத்ததில் உடனிருந்த கர்ப்பிணி உஷா பலியானார். அவரது கணவர் ராஜா காயமடைந்தார்.
இந்தச் சம்பவமஸ்தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்ப்பிணி உஷா பலியான சம்பவம் எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் வாகனச் சோதனையின்போது காவலாளர்கள் தன்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று காவல் உயர் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து காவல் தரப்பில் கூறியது: "வாகன சோதனையின்போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் காவலாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மேலும், வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட வேண்டாம்.
மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் நபர்களை காவலாளர்கள் விரட்டி சென்று பிடிக்க வேண்டாம். வண்டியை நிறுத்தாமல் சென்றால் துரத்தி சென்று பிடிக்கும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்.
அதிக கெடுபிடியுடன் வாகன சோதனையை மேற்கொள்ள வேண்டாம். தினமும் குறிப்பிட்ட வழக்குகள் மோட்டார் வாகன சோதனையில் போட வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. சிறிது நாட்களுக்கு வாகன சோதனையை நிறுத்தி வையுங்கள். மறு உத்தரவு வந்தபிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என உயர் காவல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்" என்று காவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி உஷா பலியான சம்பவத்தால் கடந்த இரண்டு நாள்களாக காவலாளர்கள் வாகன சோதனையை குறைத்துவிட்டனர் என்பது கூடுதல் தகவல்.
