கன்னியாகுமரி

பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி அலுவலகத்திற்கு திமுகவினர் திரளாக சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். கலை இலக்கிய பேரவை மாவட்டத் துணை அமைப்பாளர் விஜயன், ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சுந்தரி, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர்கள் மாணிக்கம், தாணு உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில், “தோவாளை ஊராட்சியில் கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

தெருவிளக்குகள் சரியாக எரிய வேண்டும்.

ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் முறையாக வினியோகம் செய்ய வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

போராட்டம் முடிந்தபின்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளரிடம் மனுவையும் கொடுத்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஊராட்சி செயலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.