மதுரை

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணையை மே மாதத்துக்கு ஒத்திவைத்தது. 

ஒட்டன்சத்திரம் திமுக எம்எல்ஏ ஆர்.சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், " தமிழகத்தில் உள்ள 18 ஆயிரத்து 435 கூட்டுறவு சங்கங்களுக்கான பல கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச்  5-ஆம் தேதி தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்டது. 

ஆளுங்கட்சியினர், அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களது கட்சியைச் சார்ந்தவர்களை மட்டுமே சங்கப் பதவிகளுக்கு தேர்வு செய்து வருகின்றனர். பிற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் வாக்குப்பதிவு நடத்தாமலேயே முதல்கட்டத் தேர்தலில் ஆளுங்கட்சியினரையே தேர்வு செய்துள்ளனர். ஆளுங்கட்சியினர் மீது பல முறைகேடு புகார்கள் வந்தபோதிலும் அதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 இது தொடர்பாக தேர்தல் ஆணையர் கவனத்திற்கு கொண்டுச் சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக மார்ச் 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்தும், 

திண்டுக்கல், பழனியில் மூன்று, நான்காம் கட்ட தேர்தலுக்கு தடை விதிக்கவும், 

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரிக்கவும், 

சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தவும் உத்தரவிட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கூட்டுறவு சங்க தேர்தலில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், "விசாரணையை மே இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்து" உத்தரவிட்டனர்.