காஞ்சிபுரம்

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் மொத்தமாக போலீஸ் கைது செய்தனர்.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் கடத்தி வருவதைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டு கைதானார். 

இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் தலைமைத் தாங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் காந்தி சாலை பெரியார் நினைவுத் தூண் அருகில் நண்பகல் 1.30 மணிக்கு திரண்டனர். 

பின்னர் சாலையில் அமர்ந்தவாறு ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து அங்குவந்த காவலாளர்கள் போராடியவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். காவலாளர்களை மதிக்காமல் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டதால், அனைவரையும் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

இந்த மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.