திண்டுக்கல் சரக டிஐஜியாக பணியாற்றி வரும் வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள அவர் 5 ஆண்டுகள் வரை அப்பதவியில் நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் சரக டிஐஜியாக பணியாற்றி வரும் வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் வந்திதா பாண்டே. 2010-ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான இவர் விருதுநகர் மாவட்ட சிவகாசியில் ஏஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார்.

ஏஎஸ்பியாக இருந்த போது உயர் காவல்துறை அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி வழக்கில் சிறப்பாக செயல்பட்டார். இந்த வழக்கில் உண்மையை பெற்று அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார் வந்திதா பாண்டே.

இதை தொடர்ந்து கரூர்-க்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் வந்திதா. 2016 சட்டபேரவை தேர்தலில் அரவக்குறிச்சி அருகே கண்டெயினரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை மடக்கி பிடித்தார். பின்னர் அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதாரண பிரிவுகளுக்கு மாற்றப்பட்டார் வந்திதா. 

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2022-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் அவர் டிஐஜியாக பதவி உயர் பெற்று, திண்டுக்கல் சரக டிஐஜியாக பணியாற்றி வருகிறார். 

இதனிடையே இவர் திருச்சி மாவட்ட டிஐஜி வருண் குமாரை திருமணம் செய்த நிலையில் பிரபல ஜோடியாக இந்த தம்பதி வலம் வருகின்றனர். 

இந்த நிலையில் வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு பணிக்கு செல்ல விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

5 ஆண்டுகள் வரை மத்திய அரசு பணியில் வந்திதா பாண்டே பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை அவர் மத்திய அரசு பணியில் தொடர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.