Asianet News TamilAsianet News Tamil

Dhimbam Hills Road: போக்குவரத்து தடை !! மலைப்பாதையில் சிக்கல்..அதிர்ச்சி தரும் வரலாற்று உண்மைகள்..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி- திம்பம் மலை சாலையில் இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கிராம மக்கள் முதல்வருக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளனர்.
 

Dhimbam Hills Road issue
Author
Tamilnádu, First Published Feb 14, 2022, 12:02 PM IST

தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் இந்த சாலையில் கடந்த 15 ஆண்டுகளில் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் போது பெரும் தொகையை சுங்கக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதால் சரக்கு வாகனங்கள் இந்த பாதையை பயன்படுத்தத் தொடங்கின.பண்ணாரி - திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகும்.

அதிக பாரம் ஏற்றி வருதல், வாகனப்பழுது, விபத்து போன்ற காரணங்களால், இந்த வாகனங்கள் திம்பம் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வந்தன. இவற்றிற்கு தீர்வு காணும் வகையிலும், வனவிலங்குகள் நலன் கருதியும் கடந்த 2019-ம் ஆண்டு திம்பம் சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர், பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்ததால், இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது சென்னை உயர் நிதிமன்ற உத்தரவுப்படி இந்த தடை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பண்ணாரி - திம்பம்சாலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தடைக்கு சத்தியமங்கலம், தாளவாடி சுற்றுவாட்டார மலைக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 1400 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.இங்கு வசிக்கும் வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதைத் தடுக்கவும், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் வகையிலும், பண்ணாரி - திம்பம் இடையேயான மலைப்பாதையில் வாகனப்போக்குவரத்தை நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 10-ம் தேதி முதல் இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், பகலில் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு திடீரென அமலுக்கு வந்ததால், தமிழகம் - கர்நாடகா இடையேயான போக்குவரத்தும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பண்ணாரியிலும் மறுபுறம் ஆசனூரிலும் இரவு முழுவதும் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காலை 6 மணிக்கு திம்பம் சாலையில் அனுமதிக்கப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள், ஆம்புலன்ஸ்கள் இயக்கம், காய்கறி, பால் போன்றவற்றை எடுத்துச்செல்லும் வாகனங்கள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

பண்ணாரி- திம்பம் மலைசாலையில் போக்குவரத்திற்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதிமக்கள், இரவில் நிறுத்தப்படும் வாகனங்கள் ஒரேசமயத்தில் காலையில் புறப்படும்போது, கிராமமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதற்கு தமிழக முதல்வர் தீர்வு காண வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக வன ஆர்வலர்கள் கூறுகையில், கேரளா - தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் கூடலூர் - வயநாடு-பந்திப்பூர் சாலைகளில் வனவிலங்குகளின் நலன் கருதி இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதற்கும் எதிர்ப்பு எழுந்தது. அதன் பின்னர் தற்போது வரை வெற்றிகரமாக தடை தொடர்கிறது. அதேபோல், இங்கும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும். காடு என்பது வனவிலங்குகளின் வீடு. குறைந்தபட்சம் இரவு நேரத்திலாவது அதனை சுதந்திரமாக அதனுடைய வீட்டில் இருக்க அனுமதிக்க இந்த தடை அவசியமானது என்று கூறுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios