3 மாணவிகளை எரித்த தர்மபுரி தியாகிகள் விடுதலை... நன்னடத்தை அடிப்படையிலாம்...
கடந்த 2000ம் ஆண்டில் தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த மூன்று குற்றவாளிகளும் ஆளுநரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டில் தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த மூன்று குற்றவாளிகளும் ஆளுநரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட உள்ளனர். இச்செய்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது
.
கடந்த 2000ம் ஆண்டில், கொடைக்கானல் பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை வழங்கியது. இதையடுத்து அன்று தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டனர். தருமபுரியில் சாலை மறியல்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. அப்போது அங்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்தப் பேருந்தை தருமபுரியில் வழிமறித்த ஒரு கும்பல், பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தது. இதில் பேருந்தில் இருந்து மற்ற மாணவிகள் தப்பிக்க, கோகில வாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் மட்டும் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, அவர்கள் வேலூர் மத்திய சிறையில் கடந்த 10 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வந்தனர்.
இந்நிலையில் இவர்களை விடுவிக்க தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதற்கு ஆளுநர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளதன் அடிப்படையில் குற்றவாளிகள் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக நன்னடத்தை அடிப்படையில் இவர்கள் மூவரும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலைதளங்களில் தற்போது தீயாய் பரவிவரும் இச்செய்திகளின் பின்னூட்டங்களில் ...எழுவர் விடுதலை தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க துப்பில்லாத எடுபிடி அரசு, தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்திருக்கிறது என்பது போன்ற கமெண்டுகள் குவிந்துவருகின்றன.