வெளிமாநில கொள்ளையர்களை பிடிக்க உதவிய மோப்ப நாய்க்கு உரிய பரிசு...! போலீசாரை நேரில் அழைத்து டிஜிபி பாராட்டு..!
ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த கோவை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட போலீசாரை நேரில் அழைத்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பாராட்டும் பரிசும் வழங்கினார். மேலும் இந்த கொள்ளையில் கொள்ளையர்களை பிடிக்க உதவிய மோப்ப நாய்க்கும் உரிய பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் 3 ஏடிஎம்களில் சுமார் 30 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க உடனடியாக 7தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த ஏடிஎம் கொள்ளையில் கொள்ளையர்கள் நாமக்கல் வழியாக வட மாநிலங்களுக்கு தப்பி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் சுங்கச்சாடியில், கோவை மற்றும் நாமக்கல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாலை 5 மணியளவில் அரியானா பதிவெண் கொண்ட கார் ஒன்றை மறித்து சோதனை செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், காரில் இருந்தவர்கள் கொள்ளையர்கள் என தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அந்த வழியாக வந்த இன்னொரு கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து தப்ப முயன்ற கொள்ளையர்களை 30 கி.மீ.தூரம் துரத்திச் சென்று மடக்கினர்.
அங்கிருந்து தப்பி சென்றவர்களை பொதுமக்கள் மற்றும் மோப்ப நாய் உதவியோடு போலீசார் பிடித்தனர்.
இந்நிலையில், கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த கோவை, சேலம், நாமக்கல் மாநகரங்களைச் சேர்ந்த போலீசாரை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும், சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி விஜயகுமாரும் நேரில் அழைத்து பாராட்டினர்.
மேலும் காவல்துறையினருக்கு நற்சான்றும், வெகுமதியும் வழங்கப்பட்டது. மேலும் சுங்கச்சாவடி ஊழியர் அக்பர் அலி, மோப்ப நாய்க்கும் உரிய பரிசு தொகை வழங்கப்பட்டது.