சேலம்

ஏற்காடு மலைக் கிராம பெண்கள் தங்கள் பகுதியில் சாராயக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, “எங்களை மீறி சாராயக் கடையை திறந்தால் சாராய பாட்டில்களை அடித்து நொறுக்குவோம்” என்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில் தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகள் அகற்றப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் மட்டும் 137 சாராயக் கடைகளை அகற்றியது தமிழக அரசு. அவற்றிற்கு மாற்றாக 85 கடைகளுக்கு இடம் தேர்வுச் செய்யப்பட்டது. அவற்றில் பெரும்பாலான கடைகள் குடியிருப்ப் பகுதிக்குள் வருவதால் மாவட்டம் முழுவதும் சாராயக்கடை அமைப்பதற்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மக்கள் ஒன்றுகூடி சாலை மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர். அதே சமயம், சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சாராயக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஏற்காடு ‘பக்கோடா பாயிண்ட்’ பகுதியில் புதிதாக சாராயக் கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காக்கம்பாடி, தலைச்சோலை, செங்காடு, போத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்களை காவலாளர்கள் நுழைவு வாயிலிலேயே தடுத்தனர். அப்போது, பெண்கள் ‘‘ஏற்காடு பேருந்து நிலையத்தில் உள்ள சாராயக் கடையை அகற்றிவிட்டு, அதனை ‘பக்கோடா பாயிண்ட்’ அருகில் புதிதாக சாராயக் கடையை திறக்க அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.

இதனால், எங்கள் மலைக்கிராம மக்களுக்கு பெரிய இடையூறாக இருக்கும். குடிகாரர்களின் இழி செயலில் எங்கள் பகுதி பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுவர். எனவே, அங்கு சாராயக் கடை வைக்கக் கூடாது என்று ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளோம்” என்று கூறினர்.

பின்னர், குறிப்பிட்ட பெண்களை மட்டும் மனு கொடுக்க காவலாளார்கள் உள்ளே அனுமதித்தனர். அங்கு ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மனுவை கொடுத்துவிட்டு பெண்கள் வெளியே வந்ததனர்.

அப்போது அவர்கள் பேசியது:

“எங்களது கிராமத்தின் அருகே வழித்தடத்தில் புதிய சாராயக் கடையை அனுமதிக்கக் கூடாது. எங்களது எதிர்ப்பையும் மீறி சாராயக் கடை திறக்கப்பட்டால், மலைக்கிராம மக்கள் ஒன்றுச் சேர்ந்து சாராய பாட்டில்களை அடித்து நொறுக்குவோம்.

ஏற்காட்டில் பல மலைக் கிராமங்களுக்கு இன்னமும் பேருந்து வசதி இல்லை. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட அனைவரும் பல கிலோ மீட்டர் தொலைவு நடந்தேதான் செல்ல வேண்டியுள்ளது. அப்படி செல்லும் வழித் தடத்தில்தான் சாராயக் கடை அமைக்க முயற்சிக்கிறது. பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இருக்காது. மேலும், பேருந்து வசதி ஏற்படுத்தாத அரசு, சாராயக் கடைக்கு மட்டும் ஏற்பாடு செய்வது கேவலம். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாராயக் கடையை அமைக்காமல் இருக்க வேண்டும்” என்று மலைகிராம பெண்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.