கடையநல்லூர்:

கடையநல்லூர் பேட்டையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி கர்பிணி பெண் ஒருவர் பலியானார். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பேட்டை பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் செய்யதலி. இவரது மனைவி முகைதீன் பாத்திமா (22). இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. முகைதீன் பாத்திமா கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை கடையநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

காய்ச்சலின் பாதிப்பு அதிகரிக்கவே அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது டெங்கு பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி முகைதீன் பாத்திமா நேற்று உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.