காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் காப்புக் காடுகளில் மான்கள் வேட்டையாடப்படுவதால் வனத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வேட்டையாடுபவர்கள் சிக்கினால் கடும் நடவடிக்கை உறுதி என்று வனத்துறையினர் எச்சரித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே அருங்கால், கீரப்பாக்கம், கராணைப்புதுச்சேரி, பெருமாட்டுநல்லூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகள் உள்ளன.

இந்த கிராமப் பகுதிகள் ஒட்டி வனத் துறைக்குச் சொந்தமான காப்புக் காடுகள் உள்ளன. இங்கு ஏராளமான மான், காட்டுப் பன்றிகள் போன்ற பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன.

இந்த நிலையில், சின்ன அரும்பாக்கம் பகுதியில் காப்புக் காட்டை ஒட்டியுள்ள வயல் வெளியில் விலங்குகள் துப்பாக்கியால் சுடப்பட்டு, இரத்தக்கறை இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின்பேரில் வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக யாராவது துப்பாக்கி பயன்படுத்தி இருப்பார்களா? என்பது குறித்தும் அங்கு கிடைத்த இரத்தமாதிரியை சோதனைக் கூடத்துக்கு அனுப்பி அது எந்த் விலங்கின் இரத்தம் என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் வனத்துறையினர்.

இரத்தமாதிரி சோதனைக்கு பிறகு மான்கள் தான் வேட்டையாடப்படுகிறது என்பது உறுதியானால் , வேட்டையாடுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்தனர்.

மானின் தோல், இறைச்சி என்று பணத்துக்காக வேட்டையாடுபவர்களை விட மான்கறி சாப்பிட வேண்டும் என்று ருசிக்காக வேட்டையாடுபவர்கள்தான் அதிகமுள்ளனர். யாராக இருந்தாலும் மானை வேட்டையாடுபவர்கள் மீது நடவடிக்கை உறுதி என்றனர் வனத்துறையினர்.