Asianet News TamilAsianet News Tamil

தீபக்கே தானாக முன் வந்து கொடுத்த பேட்டி – பிரபல பத்திரிகையில் வந்த செய்தி

deepak valunter-interview
Author
First Published Dec 31, 2016, 9:19 AM IST


முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, பகீர் கருத்தை வெளியிட்டார்,, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன். தேவைப்பட்டால் ஜெயலலிதாவின் சடலத்தை தோண்டி எடுக்கவும் தயங்கமாட்டோம் என கருத்து தெரிவித்தார். இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்லைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,67 நாட்களாக நான் மருத்துவமனையில் இருந்தேன் என தீபக் தானாக முன்வந்து, பிரபல நாளிதழுக்கு பேட்டி கொடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அவரது இறப்பு குறித்து சந்தேகம் இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் சென்னையை சேர்ந்த ஜோசப், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா உள்பட பலர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என மனு செய்துள்ளனர்.

இதற்கிடையில், உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், இந்த வழக்கு விசாரணையின்போது, தனக்கு சந்தேகம் இருப்பத்தாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் கொண்டு குழு அமைத்து விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் கூறினர்.

நீதிபதியின் இந்த கருத்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘நீதிபதியே இப்படி ஒரு கருத்தை தெரிவித்ததால், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்’ என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியுதாவது.

ஜெயலலிதா அத்தை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். அதில் 67 நாட்கள் மருத்துவமனையில் நான் இருந்தேன். பெரிய அத்தை (ஜெயலலிதா) சிகிச்சை பெறும்போது, அருகில் இருந்து அவரை நன்றாக கவனித்துக்கொண்டவர் சின்ன அத்தை (சசிகலா) தான்.

மருந்து, சாப்பாடு, தண்ணீர் கொடுத்து பெரிய அத்தையை ஒரு குழந்தையை போல சின்ன அத்தை பார்த்துக்கொண்டார். அத்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு ஒளிவுமறைவும் இல்லை. வெளிநாட்டு டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் எல்லோரும் சிகிச்சை அளித்தனர். அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்த ஆவணங்கள் எல்லாம் உள்ளது.

ஏற்கனவே உடல் நலம் பாதித்து மறைந்த அத்தையை நினைத்து நான் ஆழ்ந்த வேதனையில் இருக்கிறேன். சின்ன அத்தை மிகவும் வேதனையில் இருக்கிறார். ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை எங்களது மனவேதனையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

இப்போதுகூட போயஸ் கார்டனில் அத்தை இல்லாமல், ஒரு நடைபிணம் போலத்தான் சின்ன அத்தை வாழ்ந்து வருகிறார். அவரை பார்த்தாலே அழுகை வருகிறது. அதனால், போயஸ் கார்டனுக்கு போகாமல் இருக்கிறேன். அவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக அத்தையுடன் ஒன்றாக வாழ்ந்தவர். அத்தையின் இழப்பு அவருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

நம் குடும்பத்தில் இப்படி ஒருவரை இழந்து இருக்கும்போது, இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினால் எப்படி இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் நான் தான். நான் தான் அவரது ரத்த சொந்தம். ரத்த சொந்தமாகிய நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றபோது, என்னை யாரும் தடுக்கவில்லை. எனக்கு தடையும் விதிக்கவில்லை. என் அத்தை சாவில் எந்த மர்மமும் இல்லை. சர்ச்சையும் இல்லை.

அத்தையும் போய்விட்டார். அவர் கட்சியில் வகித்த பதவியை, தகுதியான நபரான சின்ன அத்தையிடம் வழங்கப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அ.தி.மு.க. தொண்டர் என்று கூறி, வழக்கு தொடர்வதும், அந்த வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்படும் கருத்துகளும், எங்களுக்கு மேலும் மேலும் வேதனையை தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios