சென்னை
தீபாவின் ஆதரவாளர்களாக இருந்த தொண்டர்களின் கூட்டம் குறைந்து, கடந்த இரண்டு நாள்களாக ஒபிஎஸ் வீட்டின் பக்கம் கூடுகிறது என்று அரசியல் வட்டாரத் தகவல் கசிந்துள்ளது.
40 நிமிடம் பேசாம இருந்து 48 மணி நேரம் தன்னைப் பற்றி மட்டுமே தமிழக மக்களை பேச வைத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
அதிமுக தொண்டர்களை மட்டும் இன்றி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவாளர்களையும் தற்போது தன்னுடைய பக்கம் இழுத்துக் கொண்டு இருக்கிறார்.
ஏற்கனவே, பத்திரிகையாளர் சந்திப்பின் போது, “தன்னுடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்க தீபாவுக்கு நான் அழைப்பு விடுப்பேன்” என்று ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.
ஆனால், இதுவரை பன்னீர் செல்வமோ அல்லது அவருடன் இருப்பவர்களோ தீபாவுக்கு எந்தவித அழைப்பும் விடுக்கவில்லை.
இது குறித்து தீபா “இப்போது ஓபிஎஸ்ஸை சந்திக்கும் திட்டம் எதுவும் எனக்கு இல்லை” என்றும், தான் முன்பே அறிவித்தபடி இம்மாதம் 24 ஆம் தேதி எனது அரசியல் பயணத்தை தொடங்குவேன்” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தினமும் தீபா வீட்டு முன்பு கூடும் தொண்டர்களின் கூட்டம், கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.
அந்த கூட்டம் எங்கு செல்கிறது என்று பார்த்தால், அது ஓபிஎஸ்ஸின் வீட்டு முன்பு கூடுகிறது என்று கூறப்படுகிறது.
இதை நிரூபிக்கும் வகையில், “உடல் இரண்டு உயிர் ஒன்று” என்ற வாசகத்தோடு, பன்னீர் செல்வம் வீட்டு அருகே தீபா ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
மேலும், ஊடகங்களிலும் தீபா பற்றிய எந்த செய்தியும் வெளியாகாமல் உள்ளதால், அவர் பக்கம் இருந்த ஆதரவாளர்கள் ஒபிஎஸ்ஸின் பக்கம் தாவி விட்டனர் என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது.
