மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை எனவும் அனுமதி பெற்றிருந்தால் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் இன்று திங்கள்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மலை ஏறி திரும்பும் போது அவர்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் தனிதனியாக பிரிந்து சென்றுள்ளனர். அதில் இதுவரை 27 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைதொடர்ந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயம் உடையவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை எனவும் அனுமதி பெற்றிருந்தால் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

கோடை காலத்தில் மலையேற்றம் செல்வது அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கோடை காலத்தில் வன விலங்குகள் தண்ணீர் தேடி வரும் என்பதால் அனுமதி தருவதில்லை என்றும் தெரிவித்தார்.