பெரம்பலூர் மாவட்டத்தில், புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு வரும் வழியில் தடுப்புச் சுவரில் வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்கு உள்பட்ட நாட்டார்மங்கலம் கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் (25). இவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் மோகன் (29), ரஞ்சித் குமார் உள்பட 4 பேர் ஆலத்தூர் பகுதியில், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, சனிக்கிழமை இரவு கேக் வெட்டி கொண்டாடினர்.

பின்னர், நாட்டார் மங்கலம் கிராமத்திற்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கூத்தனூர் பிரிவுசாலை அருகே சென்றபோது, வெங்கடேசன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தனர்.

இதில், பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த மோகனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, ரஞ்சித்குமார் அளித்த புகாரின்பேரில் பாடாலூர் காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.