Criminal incidents will be completely prevented

சென்னை நகரில் குற்ற சம்பவங்கள் முழுமையாக தடுக்கப்படும் என சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

பொதுமக்கள், எளிதான முறையில் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். காவல் நிலையத்தில் ஆய்வாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் இருப்பார்கள் என கூறுவது தவறு. அவர்களுக்கான பணிகள் இருக்கிறது.

ரோந்து பணியில் ஈடுபட்டு, பின்னர் காவல் நிலையத்தில் வந்துள்ள புகார்கள் குறித்து விசாரிப்பார்கள். அதே நேரத்தில் ஆய்வாளர்கள் இல்லாத நேரத்தில், காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்களிடம், பொதுமக்கள் புகார் செய்யலாம்.

முரண்பாடான பிரச்சனைகள், ஆபத்து குறித்த புகார்களை அந்தந்த துணை ஆணையர், உதவி ஆணையர்களை சந்தித்து புகார் மனு கொடுக்கலாம். அதன்பேரில், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு, அந்த புகார் மனுவை அனுப்பி விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

சென்னை நகரில் உள்ள நகை பறிப்பு, திருட்டு, கொள்ளை ஆகிய சம்பவங்களை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதற்காக முக்கிய சாலைகள் மற்றும் மக்கள் கூடும் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பகுதியிலும் பொருத்தப்படும்.

இதேபோல் காவல் நிலையங்களில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்யவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துஉள்பட பல்வேறு பிரச்சனைகளை சீரமைக்க சென்னையில் பழுதடைந்த சிக்னல்களை, உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் பதவியேற்று சில நாட்கள் மட்டுமே ஆகிறது. உடனே அனைத்து பணிகளும் முடிக்க முடியாது. ஒவ்வொரு கட்டமாக ஆய்வு செய்து, அதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். விரைவில், குற்ற சம்பவங்களை முழுமையாக தடுக்க உரிய நடவடிக்கை எடுப்போம்.

சென்னை கேகே நகர், சூளை பள்ளம் பகுதியில் கொடுக்கல் வாங்கல் தகராறில், வாலிபர் படுகொலை செய்ப்பட்டார். இதுதொடர்பாக கொலையாளியை 3 மணி நேரத்தில் கைது செய்துள்ளோம். சட்டம் ஒழுங்கை சரியான முறையில் போலீசார் பாதுகாப்பார்கள்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா உள்பட பல்வேறு மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன. அவ்வாறு நடப்பதை கண்டுபிடித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நகர் பகுதிகளில் ஆளில்லா விமானங்களை சிலர் பறக்க விடுவதாக தெரிகிறது. இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.