Crackers manufacturers must come forward to carry out crash crackers

விருதுநகர்

விபத்தில்லா பட்டாசு உற்பத்தியினை மேற்கொள்ள அனைத்து பட்டாசு உற்பத்தியாளர்களும் முன்வர வேண்டும் என்று அமைச்சர் நிலோபர்கபில் வேண்டுகோள் விடுத்தார்.

சிவகாசி காளஸ்வரி லியார்ட்ஸ் அரங்கில் பட்டாசுத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் ஆட்சியர் (பொறுப்பு) முத்துக்குமரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நிலோபர்கபில் ஆகியோர் பங்கேற்று பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டனர்.

மேலும், பட்டாசு விபத்தில் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கூட்டுத்தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.50 ஆயிரம் உதவித் தொகையினை வழங்கிச் சிறப்புரை ஆற்றினர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியது:

“பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட முக்கிய காரணம் கவனக் குறைவே. உரிமத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள பட்டாசு இனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்.

உரிமம் அளிக்கப்பட்ட தொழிற்சாலைப் பகுதிக்குள் மட்டுமே பட்டாசு இனங்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

அனுமதி அளிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் மட்டுமே தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். தொழிற்சாலையை குத்தகைக்கு விடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

துய்ப்பு (அனுபவம்) இல்லாத தொழிலாளர்களைக் கொண்டு கலவைகளை தயாரிக்கக் கூடாது.

தொழிற்சாலைகளில் இரும்பு சார்ந்த பொருட்களை எந்த வடிவத்திலும் பயன்படுத்த கூடாது. நிலை மின்சாரத்தினால் ஏற்பட கூடிய பாதிப்பினை தடுக்க பட்டாசு தயாரிக்கும் அறைகளில் ரப்பர் மேட் பயன்படுத்த வேண்டும்.

மேற்பார்வையாளர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். 50 பணியாளர்களுக்கு ஒரு வேதியல் துறை சார்ந்த மேற்பார்வையாளரை நியமிக்க வேண்டும்.

மனித நேயமிக்க பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி விபத்தில்லா பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் பேசினார்.

அமைச்சர் நிலோபர்கபில் கூறியது:

“தொழிற்சாலையின் உள்ளே தேவை இல்லாத பொருட்களை பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக கைபேசி பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

விபத்தில்லா பட்டாசு உற்பத்தியினை உறுதி செய்யவும், அனுமதி பெறாத பட்டாசு உற்பத்தி நிலையங்களை கண்டறியவும் வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்களின் தணிக்கையின்போது விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு விபத்தில்லா பட்டாசு உற்பத்தியை உறுதி செய்யும் நோக்கில் எண்ணற்ற பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்துள்ளது. விதிமீறல் குறித்து தொழிலாளர்கள் தகவல் தெரிவிக்கலாம். இன்னும் மூன்றாண்டுகளில் சிவகாசியில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

முதல் பணியாக தொழிற்சாலையில் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மாதம் ஒருமுறை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒரு நிலையான வழிமுறை கொண்ட பட்டாசு உற்பத்தியினை மேற்கொண்டு விபத்தில்லா பட்டாசு உற்பத்தியினை மேற்கொள்ள அனைத்து பட்டாசு உற்பத்தியாளர்களும் முன்வர வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதில், சந்திரபிரபா எம்.எல்.ஏ., தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் போஸ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சிதம்பரநாதன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் நடமாடும் கண்காணிப்பு குழு கூடுதல் இயக்குனர் மனோகரன், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் சித்திக், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.