Asianet News TamilAsianet News Tamil

NewYear2022 :புத்தாண்டு கொண்டாட்டம்.. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை

புத்தாண்டை முன்னிட்டு குடிபோதையில் வாகனங்களை இயக்குவோர் மீது ஐபிசி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

Covai SP press meet
Author
Coimbatore, First Published Dec 31, 2021, 7:57 PM IST

கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் சோதனைச்சாவடியை ஆய்வு செய்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளுக்கு முறையான போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கினார். மேலும் தனியார் பேருந்துகளில் ஏறி ஆய்வு மேற்கொண்டு நடத்துனர் ஒருவரைத் தவிர வேறு யாரும் படியில் நின்று நடத்துனர் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டார். 

Covai SP press meet

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,"புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் புத்தாண்டில் அதிவேகமாக விபத்து ஏற்படும் வகையில் வாகனங்களை இயக்குவோர் மீது ஐபிசி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்" என்றும் எச்சரிக்கை விடுத்தார். 

இதேபோல் அரசின் எச்சரிக்கையை மீறி கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தும் தனியார் விடுதிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். கோவையில் மட்டும் பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் உரிய அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பவர்கள் ஆகியோர் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்படுவர்.

Covai SP press meet

இதுப்போல் சென்னையிலும் இன்று இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை, அத்தியாவசிய வாகன போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்று சென்னை காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இரவு 12 மணிக்கு முன்பாகவே தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூடக்கூடாது என்றும், கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாடக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு வர்த்தக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios