Asianet News TamilAsianet News Tamil

நீதிமன்ற ஆவணங்கள் மாயம்?; ஊழியர்களுக்கு எச்சரக்கை விடுத்த நீதிமன்றம்…

court documents-missing-court-warned-employees
Author
First Published Dec 1, 2016, 11:44 AM IST


மதுரை,

2009-ல் நடைப்பெற்ற கொலை வழக்கின் நீதிமன்ற ஆவணங்கள் மாயமாகிவிட்டன என்று தெரிவித்த ஊழியர்கள், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை காளவாசல் பி.பி. சாவடியைச் சேர்ந்தவர் கரிகாலன் (40). டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி செல்வி கூட்டுறவு சங்கங்களின் ஆடிட்டராக பணியாற்றி வந்தார்.

சொத்துப் பிரச்சனை காரணமாக, கடந்த 2009–ம் ஆண்டு செல்வியை அவரது அண்ணன் காசிமாயன் மற்றும் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த கரிகாலனையும் அரிவாளால் வெட்டினர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்து இறந்தனர். இதுகுறித்து கரிகாலன், செல்வி, அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்டதாக கரிமேடு காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கில் காசிமாயன், இளையராஜா, சின்னகாசிமாயன் ஆகிய 3 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி மதுரை 4–வது கூடுதல் செசன்சு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை இரத்து செய்ய கோரி காசிமாயன், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது 2009–ஆம் ஆண்டு நடந்த இந்த கொலைச் சம்பவத்தில் 6 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கூறியது ஏன்? என்று அரசு வழக்குரைஞர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அந்த வழக்கின் அசல் ஆவணங்கள் 2014–ம் ஆண்டு மாயமாகிவிட்டன. இதுகுறித்து அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் வழக்கில் தொடர்புடையவர்களிடம் இருந்த ஆவணங்களை நகல் எடுத்து, அவற்றை வைத்து விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.

இதற்காக மாவட்ட நீதிமன்றத்தின் சிரஸ்தார், 4–வது கூடுதல் செசன்சு நீதிமன்ற தலைமை எழுத்தர் ஆகியோர் பிற்பகலில் ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி ஆஜரான அவர்களிடம், வழக்கு ஆவணங்கள் எப்படி மாயமாகின. நீதிமன்ற ஆவணங்கள் மாயமாகும் அளவுக்கு ஊழியர்கள் வேலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்களுக்காக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios