கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையை இசையமைப்பாளர் இளையராஜா புண்படுத்தி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் கூறியுள்ளது.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது என்றார். மேலும் பேசிய அவர், இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்து வந்தார் என்று சொல்கிறார்கள். அடிக்கடி டாக்குமென்டரி பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். அதில் இயேசு உயிர்தெழுந்து வந்தார் என நிரூபணமாகவில்லை என்று செல்லப்படுகிறது. 

உண்மையான உயிர்தெழுதல் நடந்தது ஒரே ஒருவருக்குத்தான். அது பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான். உலகத்திலேயே அவருக்கு மட்டும உயிர்தெழுதல்
நடைபெற்றிருக்கிறது. அதுவும், அவரது 16 வயதிலே என்று இளையராஜா பேசினார்.

இளையராஜாவின் பேச்சு கிறிஸ்துவத்தையும் அதன் ஆணி வேரான மத நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி, ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி கிறிஸ்தவ அமைப்புகள் இளையராஜா வீடு முன்பு இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் அறிவித்தனர். இயேசு கிறிஸ்து குறித்து இளையராஜ பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இளையராஜா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு முன்பாகவே அவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள் என போராட்டத்துக்கு வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கிறிஸ்துவ அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. கிறிஸ்தவ
நல்லிணக்கம் இயக்கம் சார்பில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்  இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். தயாநிதி இந்த புகாரை அளித்துள்ளார். அதில், இளையராஜா, கிறிஸ்துவர்களின் மத நம்பிக்கையை
புண்படுத்தி உள்ளார். இது இந்திய சட்டப்படி குற்றம். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கோருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.