காஞ்சிபுரம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்தும் நகராட்சி அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் பணிகள் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

மக்களின் அடிப்படை வசதிகளான தரமான சாலை, இரவில் அனைத்து தெரு மின் விளக்குகளையும் எரியச் செய்தல், குடிநீர் வசதி வழங்கல் போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் இதுவரை முறையாக மேற்கொள்ளவில்லை. 

நகரப் பகுதிகளில் சிறு பாலங்கள் சரிசெய்யப்படாமல் உள்ளன.  மக்கள் நகராட்சி அலுவலகத்தின் மூலம் பெறும் சான்றிதழ்களுக்கு இலஞ்சம் தரவேண்டிய நிலை உள்ளது. நகரில் அதிகளவில் காணப்படும் தெரு நாய்கள், குரங்குகள், கொசுக்கள் போன்றவற்றால் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். 

"இந்தக் குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும்; 

குடிநீர் அளவை அதிகரித்து வழங்க வேண்டும்; 

நகரப் பகுதிகளில் செயல்படும் 'நம்ம டாய்லெட்' கழிவறைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் முழக்கப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.மாசிலாமணி தலைமை வகித்தார். 

வட்டச் செயலர் கே.வாசுதேவன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணராஜ், தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

இதில் பங்கேற்றவர்கள் தங்கள்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.