புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

‘நீட்’ தேர்வால் மருத்துவம் படிக்க முடியாத மன உளைச்சலால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உருவப்படத்தை கையில் ஏந்தி, அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் மற்றும் கல்லூரிக்கு தண்ணீர் வசதி கேட்டும் இந்தப் போராட்டம் நடைப்பெற்றது.

இது குறித்து தகவலறிந்து வந்த கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆவுடையார்கோவில் காவலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துவிட்டு அமைதியாக அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.