Asianet News TamilAsianet News Tamil

சாராயக் கடைகளை மூடாத கலால் துறை அதிகாரியை கண்டித்த ஆட்சியர்... கெடு கொடுத்து எச்சரிக்கை... 

collector condemned the excise department officer who does not close the tamac liquor shop...
collector condemned the excise department officer who does not close the tamac liquor shop...
Author
First Published May 15, 2018, 10:05 AM IST


தேனி

தேனியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடாத கலால் துறை அதிகாரியை ஆட்சியர் கண்டித்து எச்சரித்தார். 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.  இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார்.  

மக்களிடம் இருந்து மனுக்களை ஆட்சியர் வாங்கி அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி இயக்க தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நிர்வாகிகள், ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில், "வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவுக்காக வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்தை புறவழிச்சாலை வழியாக இயக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்தோம். புறவழிச்சாலை வழியாகவே போக்குவரத்து இயக்கப்படும் என்று நம்பினோம். 

ஆனால், மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே, சோதனை அடிப்படையிலாவது இந்த ஆண்டு போக்குவரத்தை புறவழிச்சாலை வழியாக இயக்கிப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். 

தேனி நகர பேருந்துகளில் காமராஜர் பேருந்து நிலையம் என்பதற்கு பதில் பழைய பேருந்து நிலையம் என்று உள்ளது.  அதை காமராஜர் பேருந்து நிலையம் என்று எழுத வேண்டும். இல்லையெனில், ஜூலை 15–ஆம் தேதி நகர பேருந்துகளில் காமராஜர் பேருந்து நிலையம் என ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். அப்போது அவர்கள், ‘தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளை அகற்ற வேண்டும் என மனு கொடுத்தோம். 

அந்த கடைகளை இடமாற்றம் செய்ய நீங்கள் (கலெக்டர்) உத்தரவிட்டிருந்தீர்கள். ஆனால், இன்னும் கடைகள் இடமாற்றம் செய்யப்படவில்லை’ என்று கூறினர்.

இதைக்கேட்டதும், கலால் துறை உதவி ஆணையர் கார்த்திகேயனை ஆட்சியர் அழைத்து, ‘கடைகளை இன்னும் ஏன் அகற்றவில்லை?’ என்று கேட்டார். அப்போது, உதவி ஆணையர், ‘மாற்று இடம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். மாற்று இடம் கிடைத்தவுடன் கடைகளை இடமாற்றி விடுகிறோம்’ என்றார்.

இதைக் கேட்ட ஆட்சியர், ‘மாற்று இடம் கிடைக்க ஒரு ஆண்டு ஆனாலும், அதுவரை கடையை அங்கேயே செயல்பட அனுமதிப்பீர்களா?’ என்று கண்டித்ததுடன், ‘வருகிற 18–ஆம் தேதிக்குள் மாற்று இடம் பார்த்து கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். 

இல்லையெனில் அந்த கடைகளை மட்டும் மூடிவிட்டு, மாற்று இடம் கிடைத்தவுடன் அங்கு திறக்க நடவடிக்கை எடுங்கள்" என்று உத்தரவிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios