கோவையில் விபத்து ஏற்படுத்தி 6 பேரை கொன்ற ஓட்டுனர் ஜெகதீசன் மதுபோதையில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய செய்யப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டியது, அதிவேகமாக ஓட்டியது என்று 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

கோவை சுந்தராபுரம் பகுதியில் பேருந்திற்காக பொதுமக்களும், மாணவர்களும் காத்திருந்தனர். இதன் அருகிலேயே ஆட்டோ நிறுத்தமும் உள்ளது. அப்போது அவ்வழியாக மின்னல் வேகத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கி ஒரு சொகுசு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மற்றும் ஆட்டோ, மின்கம்பம் மீதும் மோதியது. 

இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த டிரைவர் மற்றும் 3 பயணிகளும், சாலையோரம் நின்றிருந்த கல்லூரி மாணவி உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெகதீசனை கைது செய்தனர்.

அவர் மதுபோதையில் இருந்தாரா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் நேற்றைய தினம் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குடிபோதையில் கார் ஓட்டியது அம்பலமாகியுள்ளது. அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது