Asianet News TamilAsianet News Tamil

ஒரே மழையில் தத்தளித்த சென்னை.. இதுவே தொடர்கதையா இருந்தா எப்படி..? அமித்ஷாவிற்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்..

பெருமழை, புயல் போன்ற சிவப்பு எச்சரிக்கை சூழ்நிலைகளை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மழை குறித்து உரிய நேரத்தில் சரியாகக் கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்கப் போதுமான திறன் குறைபாடாக உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

CM Stalin wrote letter to home minister
Author
Chennai, First Published Jan 1, 2022, 2:39 PM IST

பெருமழை குறித்த அறிவிப்புகளை உரிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாத நிலை உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 30ஆம் தேதி சென்னையில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாகவும், ஆனால், மிக அதிக கனமழை பெய்து பல பகுதிகள் மூழ்கியதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மழை குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்காததால், முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை அடிக்கடி ஏற்படுவதாகவும், இதனால், இயல்பு வாழ்க்கை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டு உயிர், உடைமை இழப்பு ஏற்படுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என்பதை சுட்டிகாட்டுவதாக அந்த கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

CM Stalin wrote letter to home minister

இதுகுறித்து இன்று அவர் எழுதிய கடிதத்தில், ”பெருமழைக் கால சூழ்நிலையில் மாநில அரசு அதனை எதிர்கொள்வது குறித்த ஒரு முக்கியமான விஷயத்தினை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைச் சார்ந்திருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். உரிய காலத்தில் இந்த மையத்திலிருந்து பெறப்படும் முன்னெச்சரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் அதன் மூலம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஏதுவாக அமைகிறது. ஆனால், பெருமழை குறித்த அறிவிப்புகள் உரிய நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாத நிலை உள்ளதைக் காண்கிறோம்.

CM Stalin wrote letter to home minister

உதாரணமாக 30-12-2021 அன்று மதியம் 12 மணிக்கு ஆய்வறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இடியுடன் கூடிய மிதமான மழை காலையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்யும் எனத் தெரிவித்து, அதே சமயம் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை சென்னையில் சில இடங்களில் பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.பின்னர் மாலை 3.40 மணிக்கு இந்த மையம் அளித்த எச்சரிக்கை அறிக்கையில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் பெய்யும் எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், மிகக் கடுமையான மழை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மதியம் முதல் இரவு வரை பெய்தது. மாலை 4.15 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் “ஆரஞ்ச் அலர்ட்” வெளியிட்டது. அதற்குள் மிக அதிக கன மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து பல பகுதிகள் மூழ்கி அதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் சென்னையில் ஏற்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மழை குறித்து உரிய நேரத்தில் சரியாகக் கணக்கிட்டு எச்சரிக்கை அளிக்கப் போதுமான திறன் குறைபாடாக உள்ளதால் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினால் தக்க நேரத்தில் உரிய முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை அடிக்கடி ஏற்பட்டுவிடுகிறது. இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்குவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிர், உடைமை இழப்புகள் ஏற்படுவதற்கும் முக்கியமான கட்டமைப்புகள் சேதமடைவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

CM Stalin wrote letter to home minister

இந்த நிகழ்வுகள் சென்னை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பினை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் தொழில்நுட்பத்தைச் செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்யவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, பெருமழை புயல் போன்ற “ரெட் அலர்ட்” சூழ்நிலைகளைத் துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios