Asianet News TamilAsianet News Tamil

தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பீடித் தொழிலாளர்கள் போராட்டம்...

cigerette workers fight against the Taluk office ...
cigerette workers fight against the Taluk office ...
Author
First Published Feb 7, 2018, 10:12 AM IST


திருநெல்வேலி

திருநெல்வேலியில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பீடித் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தை நேற்று பீடித் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், "இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

ஆலங்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பீடித் தொழிலாளர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர்.

இதுகுறித்து பரிசீலனை செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க தாலுகா அலுவலக அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டாராம்.

அதனைத் தொடர்ந்து பீடித் தொழிலாளர்கள் 298 பேருக்கு இலவச பட்டா வழங்க அதற்கான இடத்தை அதிகாரிகள் காண்பித்துள்ளனர். ஆனால், அந்த இடத்தை அளவு செய்யாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் சினம் அடைந்த பீடி தொழிலாளர்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். அப்போது தாலுகா அலுவலக வாசலில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதற்கு பீடித் தொழிலாளர் சங்கத்தின் ஆலங்குளம் தாலுகா தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் அழகுசுந்தரி முன்னிலை வகித்தார்.

பீடித் தொழிலாளர் கோரிக்கைகள் குறித்து மாவட்ட தலைவர் ராஜாங்கம், மாவட்ட பொதுச் செயலாளர் வேல்முருகன், கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் குணசீலன் ஆகியோர் பேசினர்.

பின்னர், ஆலங்குளம் தாசில்தார் சுப்புராயலு வந்து நடத்திய பேச்சுவார்த்தையில், "தற்போது 160 இலவச பட்டா வழங்குவதாகவும், நிலங்களை அளவு செய்வதாகவும்" உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios