சீன பட்டாசு விற்பவா்கள் பற்றி தொிவித்தால் ரூ.1 லட்சம் பாிசு!
சீனா பட்டாசு விற்கப்படுவதாக உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தால், ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இதனை தெரிவித்த அவர், ஆன்லைன் மூலம் சீன பட்டாசுகள் விற்கப்படுவதை, மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றார். இதனிடையே, சீன பட்டாசுகளை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பட்டாசு உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் கீழ்த்தளத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும், பட்டாசு கடைக்கு அருகில் நீர், மணல் உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
சீன பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என தெரிவித்த ஆட்சியர், மீறி விற்பனை செய்வோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
