Asianet News TamilAsianet News Tamil

“ஆணுக்கு 2.5, பெண்ணுக்கு 1.5 லட்சம்” பச்சிளங்குழந்தை கூவி கூவி விற்பனை – 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது

child sale-7-person-arrest
Author
First Published Nov 8, 2016, 4:48 AM IST


பச்சிளங்குழந்தையை விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் நெல்லை அருகே ஆலங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழப்பாவூர் நேரு நகரை சேர்ந்தவர் அருணாசலம்(35). கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி தேவிகா (33). இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.

இதையடுத்து அருணாச்சலம், குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது குறித்து மனைவியுடன் ஆலோசனை நடத்தினார். இதில், இருவருக்கும் சம்மதம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்களது உறவினர் கீழப்பாவூர் நயினார் (42) என்பவரிடம், தங்களுக்கு குழந்தை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அதற்கு அவர், குழந்தையை முறைப்படி தத்தெடுக்க பணம் செலவாகும் என்று கூறியுள்ளார். இதையடுத்து நயினார் ஆலங்குளம் ஆர்சி தெருவை சேர்ந்த ஆறுமுகம் (55) என்பவரிடம் குழந்தை இருந்தால் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். அதற்கு ‘பெண் குழந்தைக்கு ரூ.1.50 லட்சம், ஆண் குழந்தைக்கு ரூ.2.50 லட்சம் என பேரம் பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து அருணாச்சலம் 3 தவணையாக ரூ.2.50 லட்சம் கொடுத்தார். இதையடுத்து கடந்த மாதம் 7ம்தேதி பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை ஆறுமுகம் கொடுத்துள்ளார். அப்போது குழந்தையை தத்தெடுக்க சட்டப்பூர்வ ஆவணங்களை அருணாசலம் கேட்டுள்ளார்.

குழந்தை தத்தெடுப்பதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களை சில நாட்களில் தருவதாகவும், தற்போது குழந்தையை கொண்டு செல்லும்படி கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாசலம், நயினாரிடம் குழந்தைக்கான ஆவணம் குறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசில், அருணாசலம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், குழந்தையை விற்பனை செய்த நயினார், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி, குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த தங்கபாண்டி (57), பொன்னுத்தாய் (67), அருணாச்சலவடிவு (எ) எஸ்தர் (45), பாலசுப்பிரமணியன் (47), சேர்மன் (49) ஆகியோரை கைது செய்தனர். இதை தொடர்ந்து, குழந்தை ஆலங்குளத்தில் உள்ள விடியல் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios