Chief secretary Girija Vaidyanathan submitted in Private hospital
தமிழக அரசின் தலைமை செயலராக இருப்பவர் கிரிஜா வைத்தியநாதன். இவர் சென்னை கடந்த வெள்ளிக் கிழமையன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது அரசு பங்களாவில் சந்தித்துவிட்டு காரில் ஏறியபோது அவரது வலது காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
உடனே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவுட் பேஷண்டாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். பிறகு வீடு திரும்பிவிட்டார். இந்த நிலையில் அவரது கால் காயம் ஆறுவதில் முன்னேற்றமில்லையாம். இதனால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு, டாக்டர் குழுவினரால் சிகிச்சை தரப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து தமிழகம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாவன...
காலில் அடிபட்டதும் தனியார் மருத்துவமனைக்கு ஓடாமல் அரசு மருத்துவமனையை நாடி வந்த தலைமை செயலருக்கு வாழ்த்துக்கள் சொல்லலாம். ஆனால் அங்கு சிகிச்சை அளித்தும் கால் காயம் ஆற துவங்காதது ஏன்? சிகிச்சை சரியில்லையா? அல்லது சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு இயல்பாக அது ஆறுவதற்குள், ‘அரசு மருத்துவமனையில்தானே ட்ரீட்மெண்ட் எடுத்திருக்குது. சரியா இருக்குமோ என்னவோ, எதுக்கும் ஒரு நடை அப்பல்லோ போயிட்டா என்ன?’ என்று சுற்றத்தார் யாரும் கவலை கொண்டு சொல்லியிருப்பார்களோ? இதனால் அவர்களின் மன நிம்மதிக்காக அப்பல்லோவுக்கு சென்றாரா தலைமை செயலர்!
எது எப்படியோ குமரி அனந்தன், தா.பாண்டியன் என தமிழக அரசியலின் முக்கிய தலைகள் அரசு மருத்துவமனையை சிகிச்சைக்கு நாடியது போல் மாநிலத்தின் தலைமை செயலரான முக்கிய அதிகாரி கிரிஜாவும் அங்கே வந்தது சந்தோஷமே. ஆனால் அந்த மருத்துவமணை சிகிச்சையில் திருப்தியில்லாமல் அப்பல்லோவுக்கு சென்றிருக்கிறார்! சரி, கிரிஜா மேடம் அரசாங்கத்தின் மிக உயர் பதவியிலிருப்பதால், நல்ல சம்பளம் பெறுவதால் அப்பல்லோவுக்கு செல்ல முடிகிறது.
ஆனால் அன்றாடங்காய்ச்சிகளான பல லட்சக்கணக்கான மக்களுக்கு வறுமையின் காரணமாக அரசு மருத்துவமனையை விட்டால் வேறு கதி ஏது? இப்போது புரிகிறதா அவர்களின் அவல நிலை! ஒரு வேளை சோத்துக்கே திண்டாடும் மக்கள் உயிர் போகும் நிலை வந்தாலும் அப்பல்லோ என்ன, அமிஞ்ச கரை பிரைவேட் கிளினிக் பக்கம் கூட தலைவைத்து படுக்க முடியாது.
கிரிஜா மேடம், உங்களின் சுய அனுபவத்தினை அடிப்படையாக வைத்தாவது தமிழகமெங்கும் அரசு மருத்துவமனைகளின் சேவையை தரமுயர்த்துங்களேன். காலத்துக்கும் தமிழகம் உங்களை வாழ்த்தும்.
செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா?
