மாமல்லபுரம்,

முதல்வர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரான மாமல்லபுரம் கோதண்டபாணி நேற்று அதிகாலை மயக்கம் போட்டு விழுந்தார்.

திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரான மாமல்லபுரம் கோதண்டபாணி நேற்று முன்தினம் சென்னையில் நடந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன இறுக்கத்துடன் காணப்பட்டார்.

நேற்று அதிகாலை 2 மணி அளவில் கோதண்டபாணி எம்.எல்.ஏ. சென்னையில் இருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வந்து கொண்டிருந்தார்.

பட்டிபுலம் என்ற இடத்தில் வரும்போது திடீரென அவர் மயங்கி காருக்குள்ளேயே சரிந்தார். பின்னர், உடனடியாக அவரை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டு அவர் மயக்க நிலைக்குச் சென்றதாக தெரிவித்தனர். பின்னர் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

அதன்பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய கோதண்டபாணி எம்.எல்.ஏ., மாமல்லபுரத்தில் பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.