சூப்பர் அறிவிப்பு..! ஓசூரில் 2ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி

ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், திருச்சியில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Chief Minister Stalin's announcement that an international airport will be set up in an area of 2 thousand acres in Hosur KAK

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய அறிவிப்புகள் தினந்தோறும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் படி, திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருவதாகவும், அதில் மிக முக்கியமானது பெருந்தொழில்கள் என்றும், தமிழ்நாட்டை நோக்கி பல நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருந்து தொழில் தொடங்க வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும், இந்தத் தொழில் நிறுவனங்கள் மூலமாக தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி அடைவதோடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும், இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஓசூரில் சர்வதேச விமான நிலையம்

அதேபோல், மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக விளங்குவதாக கூறிய அவர், 2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஓசூர் சில ஆண்டுகளில் முதலீடுளை ஈர்த்து வரும் நிலையில், ஓசூரில் பல தொலைநோக்கு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகவும், ஓசூரில் புதிய பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், கிருஷ்ணகிரி தர்மபுரி பகுதியில் ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியம் என்ற நிலையில், ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் , ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

கோவை, திருச்சியில் கலைஞர் நூலகம்

அதேபோல், திமுக ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு பல நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அண்ணாவை போற்றும் வகையில் கருணாநிதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்து மகிழ்ந்தார் என்றும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளும் நூலகங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கி மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், திருச்சியில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios