சென்னையில் வன்முறையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தை ஒட்டி பெரிய அளவில் லட்சக்கணக்கில் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று அவசர சட்டம் நிறைவேற்றும் பணியை செய்தார். 

அவசர சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் போராட்டக்காரர்கள் கலைய மறுத்தனர். இதையடுத்து நேற்று காலை போலீசார் நிராயுதபாணியாக இளைஞர்களை போராட்டகளத்திலிருந்து அப்புறபடுத்தினர். 

ஆனால் அதில் 3000 க்கும் மேற்ப்பட்டோர் கடலை நோக்கி சென்றனர். அவர்களுக்கு ஆதரவாக மீனவர்கள் உடன் சேர்ந்து கொண்டனர். மறுபுறம் மெரினாவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்கள் திருவல்லிக்கேணி முழுதுமிருந்துபோராட்டத்தில் குதித்தனர். 

மெரினாவுக்குள் நுழைய முயன்றனர். பெட்ரோல் குண்டுகளை எரிந்தனர். கல்வீசி தாக்கினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். போலீசாரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் திருவல்லிக்கேணி முழுதும் பதற்றம் தொற்றிகொண்டது.

மறுபுறம் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. போலீஸ் உதவி கமிஷனர் உட்பட பல போலீசார் சிக்கி கொண்டனர். திருவல்லிக்கேணி பைகிறாப்ட்ஸ் சாலையில் போலீசாரின் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 

சென்னை முழுதும் , 108 பஸ்கள் உடைக்கப்பட்டது. 57 போலீஸ் வாகனங்கள் தாக்கப்பட்டது , கொளுத்தப்பட்டது . 4 தீயணைப்பு வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. போலீஸ் இணையாணையர் வாகனமே தீயிட்டு கொளுத்தப்பட்டது.

தாக்குதலில் 97 போலீசார் காயமடைந்தனர், பொதுமக்கள் 63 பேர் காயமடைந்தனர். சென்னையில் மட்டும் 140 இடங்களில் சாலைமறியல் நடந்தது , காயமடைந்தவர்களில் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு 3 தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தனர். 

இதுவரை வன்முறையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சம் 29 பேர், வடபழனி 8 , எழும்பூரில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை இனங்காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.