chennai producer council meeting
தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் விஷால் தரப்புக்கும், சேரன் தரப்புக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடப் போவதாக அறிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஷால் அறிவித்த நாள் முதல், தயாரிப்பாளர், அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.
நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு விஷால் தேர்தலில் நிற்கட்டும் என்று இயக்குநர் சேரன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சேரன் உள்ளிட்டோர், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும், எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், விஷால், ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனாலும், விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் சேரன் உட்ளளிட்ட பலர்,
தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்த நிலையில், இன்று தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10.30 மணியளவில் கூட்டம் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 12 மணியளவிலேயே அந்த கூட்டம் தொடங்கியதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது குறித்து விஷாலிடம் கேள்வி எழுப்பினர், உறுப்பினர்கள். அப்போது சிலருக்கு மைக் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதில் சேரன் தரப்புக்கும் விஷால் தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சேரன், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து, தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சேரன், டி.ராஜேந்தர், விஷாலுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.
