மெரினா கடற்கரை பொழுதுபோக்கிற்கு மட்டுமே…போராட்டக்கார்களுக்கு போலீஸ் வைத் செக்….

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறி கூடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், பல்வேறு காரணங்களுக்காக மெரினா கடற்கரை பகுதியில் இளைஞர்கள் கூடுமாறு சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருவதாகவும் ஆனால் இதனை இளைஞர் மற்றும் மாணவர் சமூகம் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு பொழுதுபோக்கிற்காக அதிகளவில் குடும்பமாக வருவதால், கலங்கரை விளக்கம் முதல் நேபியர் பாலம் வரை போராட்டம், ஆர்பாட்டம் ஆகியவை நடத்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா உள்பட முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த ஏற்கனவே தடை உள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி இந்த தடை விதிக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

எனவே சட்டவிரோதமாக மெரினாவில் கூடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இடத்தில், ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த காவல்துறையின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரம் எப்போதும் போல் அமைதியாக இருக்க பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.