’வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் உருவாக வாய்ப்பு :

அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும், மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கும், மார்ச் 23, 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

அதிகரிக்கும் வெப்பம் :

மேலும், தமிழ்நாட்டில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என்றும் வானிலை மையம் தகவல் கூறியுள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 5 டிகிரிபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணிக்கு எடுத்த கணக்கெடுப்பின்படி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகியிருந்தது என்று தெரிவித்துள்ளார்.