chennai lakes gradually fill up water level increase

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவு முதலே கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவில் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து, ஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்து வருகிறது. 

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி. தற்போது இந்த ஏரியில் 1,664 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னையின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 53 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் அடுத்த பெரிய ஏரியான புழல் ஏரியில் இப்போது இருப்பு 1517 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இந்தஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடிஆகும். ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 153 கனஅடியாக உள்ளது. இந்த ஏரியில் இருந்து வினாடிக்கு 84 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரி கிட்டத்தட்ட நிரம்பி வருகிறது. அதன் மொத்த கொள்ளளவான 881 மில்லியன் கன அடியில் இப்போது நீர் இருப்பு 690 மில்லியன் கனஅடியாக உள்ளது. பூண்டி ஏரியில் 984 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது அதன் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி ஆகும். 

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்றும் கன மழை பெய்து வருகிறது. மழை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் பட்சத்தில், ஏரிகள் அனைத்தும் நிரம்பும் என எதிர்பார்க்கப் படுகிறது.